கோவிட் பயணம் (2)

                                                             கோவிட் பயணம் (2)

ஊருக்கு போக வேண்டும் என்றால் முடிவு எடுத்தால் மட்டும் போதுமா.. அதுக்கான பிளான் பண்ணணுமே. முதலில் விடுமுறைக்கு மேலதிகாரியிடம் அனுமதி பெறுதல் அவசியமான ஒன்று. லீவு கேக்கும் போது தான் நாம இருக்குறதே தெரியும், அப்ப தான், நாம இல்லைன்னா எப்படி வேலை நடக்கும் அப்படின்னு நம்மளோட முக்கியத்துவத்தை நமக்கே சொல்வாங்க. நானும் என்னோட மேலதிகரியாயிடம் போனேன்.
“சார், ஒரு சின்ன விண்ணப்பம்”
“ம்ம்...”
“ஊருக்கு போய் குடும்பத்தை கூட்டிட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன் சார்”
“எப்ப?”
“இந்த வாரம் சனிக்கிழமை சார்”
“இந்த வாரம் வேலை இருக்குப்பா”
“சார்...’
“ஆமா. நான் ஏற்கனவே பேசி உன்னோட பேரைக் கொடுத்துட்டேன்”
“சார்..” இந்த சாரில் ஒரு சோகம் தான் இருந்தது. அவரும் தொடர்ந்தார்.
“இண்டர்வியூ பேனலில் உன்னோட பேரை சேத்துக்க சொல்லி இருக்கிறேன். இந்த வாரம் சனிக்கிழமை வரைக்கும் உனக்கு வேலை இருக்கும்.”
மனம் வேகமாய் கணக்கு போட ஆரம்பித்தது. இந்த வேலை, என் மேல் நம்பிக்கை வைத்து இந்த மாநிலத்தின் உயரிய தொழிலுக்கு தகுதியான நபர்களை நியமிக்க இருக்கும் இண்டர்வியூ. இது முக்கியமா இல்லை ஊருக்கு போவது முக்கியமா என்று மனதிற்குள் ஒரு வேகமான கால்குலேஷன். கடைசியில் இண்டர்வியூவிற்கு போய் விட்டு அடுத்த வாரம் ஊருக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்து அவரிடம் சரி என்று சொல்லி விட்டேன்.
ஒரு வாரம் பிஸியாய் இருந்த பின், அடுத்த வாரம், ஊருக்கு கிளம்ப பிளான் பண்ண ஆரம்பித்தேன். முதலில் டிக்கெட் எடுக்க வேண்டும், நேரம் மற்றும் பணத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச நேரத்தை விமான நிலையத்தில் செலவிட முடிவு செய்து இட்டா நகரில் இருந்து தரை மார்க்கமாக திப்ருகாட் என்னும் அஸ்ஸாமில் உள்ள சிறு நகரில் இருந்து விமான பயணம். அது கொல்கத்தா போன பின்னர், ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின் மும்பை பயணம். அங்கிருந்து, தரை மார்க்கமாய் சில்வாசா. இதற்கான டிக்கெட் புக் செய்து விட்டேன்.
அடுத்து, லக்கேஜ், எவ்வளவு எடுத்து செல்வது. மனம் லாஜிக் போட்டது, லக்கேஜ் அனுப்பினால் அதை பலர் தொட நேரிடும், அதனால் குறைந்த பட்சமாய் கையில் சின்னதாய் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டால், பலர் தொடும் வாய்ப்பு குறையும் என்று எண்ணி, சமீபத்தில் பயணம் செய்த நண்பர்களை கேட்டு பார்த்தேன். பலர் பயணமே செய்யாமல் சும்மா அனுபவமாய் சொன்னார்கள். எல்லாம் கேட்டுக்கொண்டேன்.

ஒரு வழியாய் அந்த நாளும் வந்தது. அதிகாலை 03 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் நெற்றியில் கை வைத்து பார்த்து கொண்டேன், காய்ச்சல் இருக்கிறதா என்று. இருந்தால் அவ்வளவு தான். ஏதோ ஒரு விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டால் அப்புறம் பல நாட்களுக்கு குவாரண்டைன் தான். நல்ல வேளையாய் நார்மலாய் தெரிந்தது எனக்கு. சந்தோசத்தில், இட்டா நகரில் இருந்து கிளம்பி திப்ருகாட் நகரை அடைந்தேன். ஒரு வழியாய்  எல்லா விதமான பரிசோதனைகளை முடித்து உள்ளே போய் உட்கார்ந்தேன்.
சுற்றுமுற்றும் பார்த்தால், எல்லோரும் தனித்தனியே அங்கங்கே உட்கார்ந்து இருந்தார்கள். நண்பர்கள் மட்டும் ஒன்றாய் இருந்தார்கள். பாத் ரூம் போகலாமா, வேண்டாமா என்ற எண்ணம் மனதிற்குள். இந்த ஊரில் அதிகம் பாதிப்பு இல்லை. விமானத்திலோ, கொல்கத்தாவிலோ போவதை விட, இந்த விமான நிலையமே பாதுகாப்பனதாக கருதி நான் அவசர வேலையை முடித்து வந்து இருக்கையில் இருந்தேன். அப்போது என்னுடைய மொபைலில் ஒரு நோட்டிபிகேசன். அவசரமாய் திறந்து பார்த்ததில், நான் பயணம் செய்ய இருந்த விமான குழுவில் இருந்து ஒரு செய்தி. “சிரமத்திற்கு மன்னிக்கவும். தங்களுடைய விமானம் தாமதமாய் கிளம்பும். சரியான நேரம் பின்னால் அறிவிக்கப்படும்.”
இதைப்படித்ததும், மனதிற்குள் பல குழப்பங்கள். இது லேட் ஆனால், கனெக்டிவ் பிளைட் பிடிக்க முடியுமா? ஒரு வேளை அதை தவற விட்டால், கொல்கத்தாவில் எங்கு தங்குவது. நமக்கென்று யாரைத்தெரியும் என்று அவசரமாய் மூளையை கசக்கியதில், காந்தியின் நினைவுக்கு வர, அவனுக்கு மெதுவாய் ஒரு மெசேஜை தட்டி வைத்தேன். “எனக்கு விடுமுறை கிடைத்து விட்டது. நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன். கொல்கத்தா வழியாகவே வருகிறேன். ஒரு மணி நேரம் மட்டுமே தங்கும் நேரம். அடுத்த முறை, அதுவும் லாக்-டவுண் எல்லாம் முடிந்தால் சந்திப்போம்” என்றதும் தம்ஸ் அப் மெசேஜ் வந்தது. அடுத்து, “ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்பு கொள்ளவும்” என்றும் அனுப்பி வைத்தான். மனதிற்குள் ஒரு சந்தோசம். ஆனாலும், இங்கே மும்பைக்கு வரச் சொன்ன டிரைவரை எப்படி நிறுத்துவது, வீட்டிற்கு எப்போது போவது என்ற வருத்தம் ஒரு ஓரமாய் இருந்தது.

அந்த சோகத்தில் கண்ணாடி சன்னல் வழியாய் கண்களை திருப்பினேன். அதைப்பார்த்ததும், ஏகப்பட்ட சந்தோசம் எனக்கு.

(தொடரும்)

Comments